திருமுறை - Copper Temple

திருமுறை

தவமுடைய திருவுடையீர் !

உலகில் தோன்றிய எல்லா மதம் (அல்லது) சமயங்களுக்கும் தோத்திர நூல்கள் உள்ளன, சில சமயங்களுக்கே சாத்திர நூல்களும் உள்ளன, அவற்றுள் சைவத்திற்கு சாத்திரமும். தோத்திரமும் வேறெந்தச் சமயத்திற்கும் இல்லாத வகையில் சிறப்பாக அமைந்துள்ளன. சாத்திரமாக மெய்கண்ட நூல்கள் என்று போற்றப்படுகின்ற சைவசித்தாந்தமும், தோத்திரமாக பன்னிரு திருமுறைகளும் ஞானஒளி வீசி மிளிர்கின்றன. முற்பிறவிகளில் ஒருவன் செய்த பாவமும் புண்ணியமும் தான் இந்தப்பிறவியில் அவனை இன்ப. துன்பங்களாக வந்து அடைகின்றன. வினைப்பயனால் வருகின்ற அனுபவங்களை எளிதாக அனுபவித்துக் கடப்பதற்கு. பிறவிக்கடலை நீந்தி முத்திநிலை பெறுவதற்கும் ஞானநூல் பாராயணம் வரிசையில் தலையாய இடம் பெறுவன பன்னிரு திருமுறைகள்.

திருமுறைப் பாராயணம் “தொல்வினை நீக்கவல்லது” என்கிறார் ஞானசம்பந்தப் பெருமான். இறைவனிடம் பஞ்சத்தைப் போக்க படிக்காசுப் பெற்றது, நோய் நீக்கியது, விடம் தீர்த்தது, மறைக்கதவம் திறந்தது. எலும்பைப் பெண்ணாக்கியது, கல்லை தெப்பமாக்கியது, காவிரியை வழிவிடச் செய்தது, முதலை உண்ட பாலகளை மீட்டது முதலிய பற்பல அற்புதங்களை ஆற்றவல்லன திருமுறைகள், “சாத்திரமும் தோத்திரமும் ஆனார்தாமே” என்று அப்பரும், “எனது உரை தனது உரையாக” என்று ஞானசம்பந்தப்பெருமானும் அருளியிருப்பதால் திருமுறைகள் சிவ வாக்குகள் என்று பெறப்படும், அதனால்தான் திருமுறைகளை வழிபாடு செய்யும் வழக்கமும் நடைமுறையில் நெடுங்காலமாக உள்ளது. ஆலயங்கள், ஆதீனங்கள், மடங்கள், வீடுகள் என திருமுறைக் கோயில்களை சிறிய அமைப்பில் மரத்தால் செய்து வழிபடுவதைக் காணலாம். ஆனால் தனியானதொரு ஆலயம் இல்லை. எதையும் தனித்துப் பிரித்து முதன்மைப்படுத்திக் காட்டும்போது அதன் மீது தனிக்கவனமும். ஈர்ப்பும் யாவருக்கும் தோன்றுவது உலக இயல்பாக இருப்பதால் தனியே ஒரு திருமுறை திருக்கோயில் நிர்மாணிப்பது காலத்தின் அவசியமாகிறது.

இதன் மூலம் திருமுறைகள் குறித்த அறிமுகத்தை இருப்பதைவிட இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். எனவே செப்பேடுகளில் திருமுறைகளைப் பதிவு செய்து சிவலிங்கத் திருமேனியாக வடிவமைத்து கருவறையில் வைத்து வழிபடும் வண்ணம் திருமுறைத் திருக்கோயில் அமைய உள்ளது. திருவருள் கூட்டி வைத்தபடி நடைபெறும் திருமுறைத் திருக்கோயில் திருப்பணிக்கு அனைத்து அடியார்களும். ஆன்மீக அன்பர்களும். பொதுமக்களும் ஆதரவு நல்கி உதவ வேண்டுமாய் பணிவன்புடன் வேண்டுகிறோம்,