நோக்கம் - Copper Temple

நோக்கம்

அறக்கட்டளையின் நோக்கம் :

எல்லம் வல்ல ஞானக்கூத்தன் திருவடியை போற்றி வணங்கி 2001ல் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய திருக்கோயில் திருப்பணி செய்தல், நாயன்மார்கள் அவதாரத்தலங்களில் அவரவர்களுக்கென்று புதியத் திருக்கோயில் எழுப்புதல்.

நாயன்மார் அவதாரத்தலங்களில் வருடாந்திர குருபூஜை விழாவும். திருக்கோயில் எழுப்பிய ஆண்டு விழாவும், அன்னதானமும், பெரிய புராண ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் அவரவர் அவதாரத் தலங்களில் உள்ள அடியார்களையும், பொதுமக்களையும், ஆன்றோர்களையும், சான்றோர்களையும் கலந்து கொள்ளும் வண்ணம் செய்து நம் சமய சிறப்புகளை இறைவன் திருவருளுடன் உணரும் வண்ணம் ஈடுபடுத்தி வருகிறோம்.

2001 முதல் 2017 வரை பதினேழு ஆண்டுகளாக எம்பெருமான் துணையுடன் அடியார் பெருமக்களுடைய ஆதரவுடன் ஆன்றோர்கள். சான்றோர்கள் வழிகாட்டுதலுடன் இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதலுடன் இதுநாள் வரை 19 நாயன்மார்களுக்கு இறைவன் திருவருளுடன் திருக்கோயில் அமைக்கப்பட்டது.

09.10.2018ல் அடியவர் அறுபத்துமூவர்  அருள்ஞான உலா ரதயாத்திரை தமிழகம் முழுவதும் நாயன்மார்கள் அவதாரத்தலம் . முக்தித்தலம் சென்று பொதுமக்கள் போற்றி உணரும் வண்ணமும், நிறைவாக 08.12.2008ல் தெய்வச்சேக்கிழார் திருக்கோயிலில் ஆடவல்லான் அருள்பெற்று நிறைவு பெற்றது.

திருமுறைத் தலங்கள் தோறும் பன்னிருத்திருமுறைப் பேழை அமைக்கப்பட்டு வருகிறது.

சிவபெருமான் தக்க அருளாளர்கள் மூலமாக அருளியவையே தமிழ் வேதங்களாகத் திகழும் பன்னிரு திருமுறைகள். இத்தகைய தமிழ் வேதங்கள் உலகெலாம் விளங்கிடவும், விளங்கி அனைவரும் அனைத்து நன்மைகளையும் பெற்றிடவும், அவற்றின் உயர்வை அனைவரும் உணர்ந்திடவும் கருதி. அவற்றைச் செப்பேடுகளில் பதித்து, திருத்தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்து, நிறைவாக தாமிரசபை வடிவில் திருமுறைத் திருக்கோயில் அமைத்து காலமெல்லாம் நித்திய வழிபாடு செய்து இறைவன் திருவருள் பெற “திருமுறைத் திருப்பணி” செய்வோமாக !  இதனையும் செய்வது திருவருளே அன்றி வேறு யாது? மேலான திருமுறைத் திருப்பணியில் பங்கேற்று திருவருள் திருவடியில் இணைவோம்.

அறுபத்துமூவர் அன்னதானக் கூடம் அமைத்து திருக்கோயில் வழிபாட்டிற்கு வரும் அன்பர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குதல்.

சைவநெறியினை மக்களுக்கு உணர்த்தும் ஏழ்மை நிலையிலுள்ள ஓதுவார்களுக்கும், சிவனடியார்களுக்கும் இலவசமாக உணவும், இருப்பிடமும் வழங்குதல்.

பன்னிரு திருமுறைகளில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவ, மாணவியருக்கு நூலகம், உணவு, இருப்பிடம் ஆகியவற்றை இலவசமாக வழங்குதல்.

பன்னிரு திருமுறைகளை மாணவ, மாணவியருக்கு இலவசமாகப் பயிற்றுவித்தல்.

சித்தர்களும், ஞானிகளும் பயன்படுத்திய அரியவகை மூலிகைகளின் பயன்களை பொதுமக்கள் அறியும் வகை செய்தல், மூலிகைத் தோட்டம் அமைத்து பொது மக்களுக்கு மூலிகைகளை இலவசமாக வழங்குதல்.

பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொது நூலகம் அமைத்தல்.

அறுபத்துமூவர் மற்றும் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் அமைத்தல்.

சைவ நெறிமுறைகள், தமிழர் பண்பாட்டுநெறி, தனிமனித ஒழுக்க நெறியினை சொற்பொழிவுகள் மூலம் பொதுமக்களுக்கு உணர்த்துதல்.

பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் தியான மண்டபம் அமைத்தல்.

பன்னிரு திருமுறைகளையும் செப்பு தகட்டில் பதித்தல்.

அறுபத்துமூன்று நாயன்மார்கள் அவதரித்த திருத்தலங்களில், திருக்கோயில் அமையப் பெறாத இடங்களில் திருக்கோயில் அமைத்தல்.

ஆங்காங்கே சிதலமடைந்துள்ள அறுபத்துமூவர் சன்னதிகளைப் புதுப்பித்தல்.

அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறுகளைக் குறிக்கும் அரியவகை சித்திரங்களைக் கொண்டு அறுபத்துமூவர் சித்திரக்கூடம் அமைத்தல்.

அறுபத்துமூவர் தொடர்பான பொருட்கள் மற்றும் பண்டைய தமிழ் மக்களும், மன்னர்களும் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய அறுபத்துமூவர் அருங்காட்சியகம் அமைத்தல்.

சைவ நெறியினை உணர்த்தும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் புத்தகங்களை பொது மக்களுக்கு வழங்குதல்.

பிறைசூடிய பெருமானின் வழிபாட்டுக்கு உகந்த நால்வகை மலர்களைத் தரும் தாவரங்களைக் கொண்ட அறுபத்துமூவர் நந்தவனம் அமைத்தல்.

திருக்கோயில்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற தலவிருட்சங்களைக் கொண்ட அறுபத்துமூவர் தலவிருட்சங்கள் அமைத்தல்.

அவ்வப்போது அறக்கட்டளை நிர்வாகத்தில் முடிவு செய்யப்படும் தருமம் மற்றும் சைவ சமயம் சார்ந்த பணிகளைச் செய்தல்.