திருக்கோயில் - Copper Temple

திருக்கோயில்

திருமுறைக் திருக்கோயில் கருவறை அமைப்பு : சைவ சமய உலகத்தில் சிறப்பாக என்றென்றும் விளங்கி அருள்பாலித்து வருகின்ற பெருமானுடைய தாமிர சபை வடிவில் திருமுறைக் கருவறை அமைக்கப்பட்டு கீழ்த்தளத்திலிருந்து கோபுரக்கலசம் வரை திருமுறை திருக்கோயில் முழுமையாக செப்புக் கவசம் இடுதல் வேண்டும். மூலவராக பன்னிரு திருமுறைகளையும் திருச்சன்னதியுள் செப்பேடுகளாக எழுந்தருளச் செய்து கும்பாபிஷேகம் செய்விக்க வேண்டும்.
துவார பாலகர்கள் : சைவத்தின் கண் திருமுறைகளைக் கண்டெடுத்து அனைத்து திருக்கோயில்களிலும் திருமுறைகளை அரங்கேற்றிய திருமுறைகண்ட சோழச் சக்கரவர்த்தி இராஜராஜசோழனையும் அறுபத்துமூன்று நாயன்மார்களை உலகறிய திருத்தொண்டர் புராணத்தை அரங்கேற்றிய அநபாய சோழனையும் திருமுறைக் கருவறையின் துவார பாலகராக எழுந்தருளச் செய்விக்க வேண்டும்.
சமய குரவர்கள் நால்வர் : சைவப் புண்ணியக் கண்கள் என்று சேக்கிழாரால் போற்றப்படும் நால்வர் சன்னதி திருமுறைத் திருக்கோயிலில் அமைத்து என்றென்றும் சமய உலகம் ஏற்றிப் போற்றி வழிபட எல்லாம் வல்ல ஞானக்கூத்தன் திருவருள் கூட்டியுள்ளது,
பன்னிரு திருமுறைகளை அருளிய அருளாளர்கள் – 27 : சிவபெருமான் தக்க அருளாளர்கள் மூலமாக அருளியவையே தமிழ் வேதங்கள் ஆகும். பன்னிரு திருமுறைகளை அருளிச் செய்த 27 அருளாளர்களையும் திருமுறைத் திருக்கோயில் கோஷ்ட மூர்த்தமாக எழுந்தருளச் செய்விக்க வேண்டும்.
தெய்வச் சேக்கிழார் : ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த பெரியபுராணம் அருளிச் செய்த தெய்வச் சேக்கிழார் பெருமானுக்கு திருமுறைத் திருக்கோயிலில் சன்னதி அமைத்து அவதாரத் தலத்தின் சிறப்புகளை திருவருள் துணையுடன் ஏற்றிப் போற்றும் வண்ணம் விளங்க உலகெலாம்.
சந்தானக்குரவர்கள் : திருமுறைத் திருக்கோயிலில் சைவ சாத்திர நூல்களை அருளிச்செய்த சந்தானக்குரவர்களுக்கு தனி சன்னதி அமைத்து அவர்களுடைய சிறப்புகளையும் அவதாரத் திருத்தலத்தின் சிறப்புகளையும் அனைத்துலகமும் அறியும் வண்ணம் பெருமான் திருவருள் துணையுடன் அமைக்கப்பட உள்ளது.
சைவ சமய அருளாளர்கள் : திருமுறைத் திருக்கோயில் வளாகத்தில் நமது சமயத்தில் அனைத்து வகையிலும் அருளாட்சி ஆற்றிய அனைத்து அருளாளர்களுடைய திருமேனிகளை எழுந்தருளச் செய்து ஒவ்வொரு அருளாளர்களுக்கும் தனியே சிறு சன்னதிகள் அமைத்து அவரவர்களுடைய சிறப்பையும் அவதாரத் தலத்தின் சிறப்பையும், அவர்கள் இயற்றிய நூல்களையும் அவர்களுடைய வரலாற்று சிறப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கண்டு நிலைத்திட கருங்கல்லில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறித்திட வேண்டும்.
நிலம் : திருமுறைத் திருக்கோயில் அமைப்பதற்கும், ஆனித் திருமஞ்சனத்தன்றும் ஆருத்ரா தரிசனத்தன்றும் திருமுறைத் திருமேனி எழுந்தருளி அருள்பாலிக்கின்ற மகாமண்டபமும் அருளாளர்கள் சன்னதிகள் அமைப்பதற்கும், அன்பர்கள் நிறைவாக அமர்ந்து வழிபாடு செய்வதற்கும் 10  ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஆகவே அடியார்கள், செல்வப் பெருமக்கள் நிலமாகவும், நிதியாகவும் அளித்து இத்திருப்பணி நிறைவு பெற அருள்புரிய ஞானக்கூத்தன் திருவடியை வணங்கி வேண்டுகிறோம். கட்டுமானப்பணி : திருமுறைத் திருக்கோயில், மகா மண்டபம், அருளாளர்கள் சன்னதி, மடப்பள்ளி, பூஜை பொருட்கள் அறை, நூலகம், நந்தவனம், பசுமடம், நீர்தேக்கத்தொட்டி, சொற்பொழிவு அரங்கம், அலுவலகம், குளியல் அறை, கழிவறை, மதிற்சுவர் இவை அனைத்தும் ஒருங்கே நிலைபெறுதல் வேண்டும். இவை அனைத்தும் அமைப்பதற்கு இரண்டு மும்முனை மின் இணைப்பும் தேவைப்படும். இத்திருப்பணியில் தங்களுக்கு விருப்பப்பட்ட பணிகளைத் தாங்களே ஏற்று செய்வோம். ஆண்டுத் திருவிழாக்கள் : திருமுறைத் திருக்கோயிலில் முக்கியத் திருவிழாவாக வருடந்தோறும் ஆனித் திருமஞ்சனத்தன்றும் ஆருத்ரா தரிசனத்தன்றும் கருவறையில் உள்ள செப்பேட்டுத் திருமுறைத் திருமேனிகளை மகா மண்டபத்தில் எழுந்தருளச் செய்து தூப தீப நெய்வேத்திய ஆராதனைகள் செய்வித்து அனைத்து அடியார் பெருமக்களும், அன்பர்களும் வழிபாடு செய்யவும், பாராயணம் செய்யும் வண்ணம் திருவிழாவாக நடைபெற உள்ளது, வருடந்தோறும் அனைத்து அருளாளர்களுடைய திருநட்சத்திரத்தன்று குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.
நித்தியப்படி பூஜை முறைகள் : திருமுறைத் திருக்கோயில் கருவறையில் செப்பேட்டுத் திருமுறைகளை எழுந்தருளச்செய்து அத்திருமேனிகளுக்கு உடையவராக ஸ்படிக லிங்கம் திருமுறைநாதராக பாவித்து நித்தியப்படி 4 காலபூஜை உடையவர் திருமுறை நாதருக்கே நடைபெறும் இத்தகைய சம்பிரதாயம் சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு நடைபெறும் பூஜை முறை வழக்கமாகும். அம்முறையே நாம் அனைவரும் திருமுறைத் திருக்கோயிலில் வழிபாடாற்றுவதே திருவருளின் திருவுள்ளமாகும்.
திருக்கோயில் : ஞான பூமியில் திருவருளே முன்னின்று திருத்தலங்கள் தோறும் எழுந்தருளி அனைத்து ஜீவராசிகளுக்கும் அருளாசி செய்து கொண்டிருக்கும் திருக்கோயில் வரலாற்றுக் குறிப்பு திருமுறைத் திருக்கோயிலில் அமையப்படுதல் வேண்டும். சமயத்திலுள்ள சாத்திர, தோத்திர, இதிகாச, புராண, இலக்கிய. இலக்கண .மருத்துவ. யோகா. வாழ்வியல் நூல்கள் நம் சமயத்திற்கே உரியதாக என்றும் போற்றப்பட்டு வருகிறது, உலக நாடுகளையும் நம் சமய நூல்கள் கவர்ந்து உள்ளது. திருக்கோயிலில் சமய நூலகம் அமைத்திடுதல் வேண்டும். மேற்கண்ட அரியவகை சமய நூல்களை அன்பர்கள் இத்திருக்கோயிலுக்கு தந்தருள வேண்டுகிறோம்,
18 சைவ ஆதீனங்கள் : சைவ சமயத்திலுள்ள 18 ஆதீனங்களைத் தோற்றுவித்த குரு முதல்வர்கள் அவதாரத்தலச் சிறப்புகளையும், திருமேனிகளையும், அவரவர்களுடைய தவச்சிறப்புகளையும், நூல்களையும் சிறப்புக் குறிப்புகளாக திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ளது,
வள்ளல்கள் : சைவ சமயக் கொடைகளின் வரலாற்றை உலகுக்கு அளித்த பெருமக்களின் வரலாற்று குறிப்பை மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை நன்கு கற்று அறியும் வண்ணம் அவர்களுடைய பெரும் சிறப்பையும் சிறு குறிப்புகளாக இத்திருமுறைத் திருக்கோயில் வளாகத்தில் இடம் பெற உளள்து.